Sunday, January 9, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - ஐந்தாம் நாள்

"தம்பீ, சென்னையில புத்தகக் கண்காட்சி போட்டிருக்கானாமுள்ள... ஒரு நாளு ரெண்டு பேரும் போகலாம். முடிஞ்சா ஏதாச்சும் வாங்கிட்டு வரலாம்" என்று சித்தப்பா சொல்லியிருந்தார்.

"இதோ பாருங்க உங்களுக்கு 64 வயசாகுது. லீவ் டேஸ்ல கூட்டம் வேற அதிகமா இருக்கும். அதனால காலம்பர போயிட்டு வந்துடலாம். அதுதான் உங்களுக்கு சௌகர்யமாகவும் இருக்கும்" என்று பலமுறை அவருடன் பேசி பயணக் குறிப்பு தயார் செய்திருந்தேன்.

அதன்படி சனிக்கிழமையன்று செல்வதாகவும், காலை 11 மணிக்கு அரங்கம் திறந்ததும் உள்ளே நிழைந்து விடலாம் என்றும் முடிவு செய்தோம். மண்டையை மண்டையை ஆட்டியவர் வீட்டிலிருந்து புறப்பட்டதே காலை 11.30 மணி, ஏறக்குறைய மதியம். பள்ளிக் குழந்தைகள் எவ்வளவோ தேவலாம்.

பாரிமுனை நோக்கிப் புறப்பட்டோம். பேருந்தை விட்டுக் கீழிறங்கியதும் குறளகம் செல்ல வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். காரணத்தைக் கேட்டபோது, "பொங்க நாள் வருது. வேல செய்யறவங்களுக்கு எனாம் கொடுக்கணும்ல. கதர் வேட்டி என்ன வெலன்னு பாத்துட்டுப் போகலாம்" என்றார்.

"அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லையே!"

"ஆமா, நீயும் நானும் ஆபீஸ் போயி வெறகு முறிக்கப் போறோம். அதனால நேரம் இல்லாமப் போகுது. கெடப்பா!" என்றார்.

ஒருவனின் மர்மஸ்தானத்தை குறிவைத்துத் தாக்குபவர்களை என்ன செய்வது? மௌனமாகப் பின்னால் சென்றேன். சித்தப்பா வாடிக்கையாகச் செல்லும் கடை மூடியிருந்தது. அங்கிருந்து சென்று வெண்ணை வாங்க வேண்டுமென அழிச்சாட்டியம் செய்தார். இரண்டு கிலோமீட்டர் நடக்க வைத்து, பாரீசின் வீதிகளில் அலையவைத்து ஒரு வெண்ணைக் கடையைக் கண்டுபிடித்தார்.

"தம்பீ... இங்க வெண்ணை ரொம்ப நல்லா இருக்கும்பா. வேற எடத்துல வாங்கினா எமாத்திருவானுங்க. உனக்கு என்ன தெரியும். நான் 80-ல் இருந்து சென்னைக்கு வரவன்" என்று 30 வருடங்களுக்கு முந்தைய சென்னையின் தரத்தைப் பற்றி பேசிக்கொண்டு வந்தார். ரொட்டி, ரஸ்க், அகர்வால் ஸ்வீட் என பிடித்த பண்டங்களை வாங்கி பைகளில் திணித்துக் கொண்டார். அவருக்குப் பிடித்த ஹோட்டலில் மதிய உணவை முடித்து கண்காட்சி செல்வதற்கு 2.30 ஆனது. உரிய நேரத்திற்கு வந்திருந்தாள் சேரலை சந்தித்திருக்கலாம். அது முடியாமல் போனது.

திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் சொற்பொழிவிற்கு கூடிய கூட்டத்திலும் பார்க்க சற்றே குறைவான கூட்டமென்றாலும் புத்தகக் கண்காட்சி என்று பார்க்கும்பொழுது இதனை மாபெரும் கூட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். முதல்நாள் எந்திரன் படத்திற்கான டிக்கெட் வாங்குவதுபோல முன்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்றேன். "என்ன தம்பி இவளோ கூட்டமா இருக்கு?" என்று சித்தப்பா கேட்டார்.

"அதுக்குதான் காலைலேயே வந்துடலாம்னு சொன்னேன்."

"இப்போமட்டும் என்ன கொறஞ்சி போயிடுச்சி. கோயில்மாடு மாதிரி ஒரு சுத்து சுத்திட்டு வந்துடலாம். சூப்பரா டைம் பாஸ் ஆயிடும்." என்றார்.

உள்ளே நுழைந்ததும், ஜோல்னா பையை மாட்டிய நண்பர் கண்ணில் பட்டார். ஓடிச்சென்று பையை எட்டிப் பார்த்தேன். திருடுவதற்கு ஏற்றார்போல எதுவும் இல்லை. அவரும் நம்மை கவனிப்பதாக இல்லை. அழுத்தமாக முதுகைக் கிள்ளினேன். பெருங்குரலெடுத்து "ஆத்தாடி..." என்று கத்தினார். பக்கத்தில் நின்றிருந்த பெண் என்னை முறைத்துப் பார்த்தார். நான் நண்பரைக் கைகாட்டினேன்.

இந்த முகத்தை வேறெங்கோ பார்த்த ஞாபகம். Oh yes... எனக்கும் மூளை வேலை செய்கிறதே!. சென்ற வருடம் நடந்த பாராவின் பயிலரங்கத்தில் இவர் என்னுடைய வகுப்புத் தோழி. கேணியில் கேள்வி கேட்கும் பொழுது பார்த்திருக்கிறேன். சில புத்தக வெளியீடுகளிலும் பார்த்திருக்கிறேன்.

நிலைமையை சமாளிக்க "பாலபாரதி, இவங்க என்னோட வகுப்புத் தோழி" என்று அறிமுகப்படுத்தினேன்.

"நான் அவரோட வைஃப்" என்ற தோழி ஒரு பெரிய பல்பாக தேர்ந்தெடுத்து என்னிடம் கொடுத்தார். எழுத்தாளர் பாலபாரதி தம்பதியரிடம் அசடு வழிந்து கொண்டே அங்கிருந்து விடைபெற்றேன். தொங்கிய முகத்துடன் சுற்றிக்கொண்டிருந்த என் தோள்களில் உள்ளங்கை சூடேறியது. திரும்பிப் பார்த்தால் "வெங்கட் மாமா". அக்கா தூரத்தில் விரட்டிக்கொண்டு வந்தாள்.

"டேய்... World Book Library shop-ல நான் பலப் வாங்குனேண்டா".

"நீங்களுமா வெங்கட்".

"ஆமாண்டா... ஜெயா நம்மள நெருங்கிட்டா, அத அப்புறம் சொல்றேன். அடுத்த வருஷம் நம்மளும் ஒரு கடை போட்டுறலாம்டா" என்று சொல்லவும் அக்கா அருகில் வரவும் சரியாக இருந்தது. சித்தப்பா அருகில் இருக்கவும் ஜெயா சமத்தாக இருந்தாள். நாங்கள் தப்பித்தோம்.

பல இடங்கள் சுற்றிவிட்டு உயிர்மைக்குச் சென்றோம். வெள்ளைச் சீருடை அணிந்த உயரமான மனிதரின் பாக்கட்டில் VIP பாஸ் இருந்தது. அருகில் சென்று "நீங்கள் தானே சினிமா இயக்குனர் SP முத்துராமன்?" என்றேன். பலமான யோசனையுடன் தலையாட்டினார்.

"உங்கள் வீட்டில் நூலகம் இருக்கிறதாமே? விரும்புபவர்கள் வந்து படித்துவிட்டுச் செல்லலாம் என்ற சலுகையை வேறு வழங்குகிரீர்கலாமே?" என்று இதழ்களில் படித்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

"அப்படியெல்லாம் நான் ஒன்னும் செய்யலையே!" என்று தலையை இடவலமாக நான்கு முறை ஆட்டினார். தவறான தகவல்களுடன் பேசியதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடைபெற்றேன். என்னுடைய உடலின் சக்தி இழந்து கையிலுள்ள புத்தகங்களை சுற்றிலும் சிதறச் செய்தேன். குனிந்து எடுப்பதற்குக் கூட யோசனை போகவில்லை. அப்பொழுது பார்த்து வானவில்வீதி கார்த்திக் வந்து சேர்ந்தான்.

"வயசானா இதெல்லாம் சகஜம் கிருஷ்ணா. Take it easy" என்று கைகுலுக்கினான்.

அவனிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு வெளியில் வந்தேன். பால்ய நண்பர்கள் ராஜேஷ், ஸ்ரீனி, ரகு ஆகியோரைப் பார்க்க நேர்ந்தது. அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு கவிஞர் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு ஓடினார். அவர் பின்னால் நான்கு பேர் பாதுகாப்பிற்கு. அவரை வழிமறித்து "பையில் என்ன மயிரா?" என்று கேட்டேன்.

மயிரு யாத்ரா - அவருடைய நண்பர்களை அறிமுகம் செய்தார். ஒருவர் பின் ஒருவராக சங்கர், மயில்ராவணன் போன்ற நண்பர்களையும் பார்க்க நேர்ந்தது. சித்தப்பாவிற்கு சுவாரஸ்யம் குறைந்ததால் கண்காட்சியிலிருந்து கிளம்பினோம். பேருந்தின் ஜன்னலோர இருக்கையை அவருக்கு பிடித்துக் கொடுத்தேன். தன்னுடைய பையை மடியில் வைத்துக் கொண்டு தடவிப் பார்த்தார். அதில் இரண்டு புத்தகங்களும் இருந்தன.

4 comments:

சென்ஷி said...

//அழுத்தமாக முதுகைக் கிள்ளினேன். பெருங்குரலெடுத்து "ஆத்தாடி..." என்று கத்தினார்./

தலையில கொட்டலையா? :))

விக்னேஷ்வரி said...

சிறுகதை மாதிரி எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு உங்க அனுபவப் பகிர்வு.

கிருஷ்ண மூர்த்தி S said...

பாவம் எஸ் பி முத்துராமன்! அவரும் சேர்த்தல்லவா பல்பு வாங்கியிருக்கிறார்!!

தான் படித்த புத்தகங்களை எல்லாம் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்து, தன்னுடைய வீட்டிலேயே ஒரு நூலகமாக, வாசிக்க வருகிறவர்களுக்குக் கொடுக்கும் அந்தத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான முக்தா வி ஸ்ரீனிவாசனை, இந்த நல்ல தகவலோடு பதிவர் உண்மைத்தமிழன் தன்னுடைய வலைப்பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

http://truetamilans.blogspot.com/2009/10/blog-post_26.html

.

....

//இந்தப் பதிவில் இருந்து கொஞ்சம் ஆர்வமூட்டும் ஒரு சில வரிகள்- ஒரு அறிமுகத்திற்காக மட்டும்,

"தனது கலையுலகப் பணிகளுக்கிடையே இப்படி எழுத்துப் பணியையும் விடாமல் தொடர்ந்து வந்திருக்கும் முக்தா சீனிவாசன், இத்தனை ஆண்டு காலமாய் படிப்பதற்காக அவர் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இரண்டு வீடுகள் தேவைப்படுகின்றனவாம்.

சும்மா நாமே படித்து முடித்துவிட்டு அடுக்கி வைப்பதற்காக புத்தகங்கள்..? மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்பதற்காக இந்த வயதில் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார் இந்தப் பெரியவர்.

தி.நகரில் வைத்தியராமன் தெருவில் இருக்கும் இவரது வீட்டின் கீழேயே ஒரு நூலகத்தைத் துவக்கியிருக்கிறார். அதில் தன்னிடமிருக்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். வெறும் நூறு ரூபாய் அட்வான்ஸாக கட்டிவிட்டால் போதும்.. சிலரிடம் அதைக் கூட கேட்பதில்லை.. ஒரு நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். 5 அல்லது 6 நாட்கள் டைம் கொடுக்கிறார். படித்துவிட்டு மீண்டும் வந்து வேறு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என்கிறார்."

கிருஷ்ண மூர்த்தி S said...

வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தகவல்......

"ஆனால் ஒன்று.. திரும்பி வரும்போது யாராக இருந்தாலும் "புத்தகத்தைப் படித்தீர்களா..? முழுசாகப் படித்தீர்களா..? எனக்குச் சந்தேகமா இருக்கு.. எங்க நான் கேள்வி கேட்கிறேன்.. பதில் சொல்லுங்க.." என்று புத்தகத்தைப் பார்த்து கேள்வி கேட்டு அவர்களை அசடு வழியவும் வைக்கிறார். பார்ப்பதற்கு கொஞ்சம் காமெடியாகவும் உள்ளது.
..............................
....................................................................................

இந்த நூலகத்தில் பல அரிய பழைய காலப் புத்தகங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய புத்தகங்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், இங்கே வைப்பதற்கு இடமில்லாததால் வைக்க முடியவில்லை என்றும் வருத்தப்பட்டுக் கொண்டார். "

நூலக முகவரி

திரு.முக்தா சீனிவாசன்
5, வைத்தியராமன் தெரு
தி.நகர்
சென்னை-600 017.