Sunday, March 29, 2009

Pinjugal - Ki. Raja narayanan

பிஞ்சுகள் -கி.ராஜநாராயணன் (Rs.35)
வெளியீடு: அன்னம்

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Pinjugal - Ki. Ra

குழந்தைகள் உலகம் விவரிக்க முடியாத அற்புதங்கள் நிறைந்தது. கற்பனைகளும், கனவுகளும் கொண்டு துள்ளித் திரியும் கிராமத்து சிறுவர்களின் விளையாட்டு வாழ்க்கை அதனினும் கூர்ந்து கவனிக்க வேண்டியது. குளத்தங்கரை மரங்களில் ஏறி சேகரிக்கும் காகத்தின் முட்டையிலிருந்து, வயல் வெளிகளில் ஓடித் திரிந்து விளையாடுவது வரை அனைத்தும் அபூர்வங்கள் நிறைந்தது.

கிராவின் பிஞ்சுகள் அதுபோன்ற குழந்தைகளின் உலகத்தை ஒப்புநோக்கி எழுதப்பட்ட சிறந்த குழந்தை நாவல்களில் ஒன்று. இது கையெழுத்துப் படியிலேயே இலக்கிய சிந்தனைப் பரிசு பெற்ற நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியம்மை கண்டு வெங்கடேசும், அவனுடைய தாயும் படுத்திருக்கிறார்கள். அவனுடைய அம்மா நோயின் தீவிர தாக்கத்தால் இறந்துவிடுகிறாள். பெரியம்மைக்கு அந்த காலத்தில் சரியான மருத்துவ வசதி இல்லாததை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். அம்மை கண்ட வீட்டில் தாளிக்கும் ஓசையிலிருந்து, சங்கொலி வரை எதுவுமே கேட்கக்கூடாது என்பதால் ஆரவாரமின்றி அடக்கம் செய்து விடுகிறார்கள். தனியறையில் இருக்கும் வெங்கடேசிடம் சொல்லாமலே அனைத்தையும் செய்துவிடுகிறார்கள்.

குணமாகி விஷயம் தெரிந்து வெங்கடேசு பதைக்கிறான். நோயினால் படுத்ததாலும், தாயின் இழப்பினாலும் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிடுகிறான். அந்த வருடம் முழுவதும் ஊரிலுள்ள எல்லா இடங்களிலும் சுற்றி அலைகிறான். ஊரில் அலையும் காலங்களில் அவனுடைய முக்கிய வேலையே பலவிதமான பறவைகளின் முட்டைகளை சேகரிப்பது. திருவேதி நாயக்கரின் ஸ்நேகம் மூலம் பல பறவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்கிறான். நமக்குப் பெயர் தெரியாத பல பறவைகளின் பெயர்கள் இந்த நாவலை வாசிப்பதின் மூலம் தெரியவருகிறது. ஆசிரியரின் பறவைகளைப் பற்றிய கூர்ந்த அவதானிப்பு இங்கு பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அவனுடைய நண்பன் அசோக் ஊரிலிருந்து கோடை விடுமுறைக்கு வருகிறான். வெங்கடேசின் சக தோழனான செந்திவேலுடன், அசோக்கும் சேர்ந்து கொள்கிறான். மூவரும் எல்லையிலா மகிழ்ச்சியுடன் ஊர் சுற்றுகிறார்கள். இப்படியே ஆனந்தமாக செல்கிறது கோடைவிடுமுறை.

ஒருநாள் அசோக்கின் அண்ணன் மோகன்தாஸ் "நீ என்னை விட நெறைய விஷயங்களை தெரிஞ்சி வச்சிறுக்கையே, மேலே படிக்க வேண்டியதுதானே" என்று கேட்டு வைக்க, இவனுக்கு மேலே படிக்க வேண்டும் என்ற ஆசை ஊற்றெடுக்கிறது. அவனும் தன்னுடைய அப்பாவிடம் சொல்லி வெளியூரில் படிக்க சம்மதம் வாங்குகிறான்.

கோடை விடுமுறை முடிந்து அசோக் ஊருக்கு செல்லும் ரயிலில் வெங்கடேசும் சேர்ந்து கொள்கிறான். இது வரை ஓடும் ரயிலை வெளியிலிருந்து பார்த்த இவனுக்கு, ஓடும் ரயிலிலிருந்து வெளியை பார்ப்பதற்கும், வெளியிளுள்ளவர்களுக்கு கையசைப்பதும் ஆச்சர்யமாய் இருக்கிறது.

இறுதியில் தன்னைப் போலவே படிப்பதற்கு செல்லும் பலரையும் ஒருமுறை பார்த்துவிட்டு அசோக்கின் பக்கத்தில் சென்று அமர்கிறான். ரயில் ஜிகு ஜிகுவென்று போவதாக என கதை முடிகிறது.

நாவலை படித்து முடித்த பிறகு கூட பறவைகளின் சப்தமும், இதுவரை கேட்டிராத வட்டார சொற்களின் ஓசையும், ரயில் நகரும் ஜிகு ஜிகு ஓசையும் கேடுக்கொண்டே இருக்கிறது. கி.ராவின் படைப்புக்களில் முத்தாய்ப்பான குழந்தைகள் நாவல் இது.

3 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல அறிமுகங்கள் கிடைக்குது இங்கே!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நன்றி ஜமால்...கருத்துக்கும்,பின்னூட்டத்திற்கும். தொடந்து வந்து கருத்தைத் தெரிவித்தால் மகிழ்வேன்.